முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர மற்ற அனைவரும் அம்முக கட்சியில் சேருவர்கள் என்றும் எனவே நாங்கள் அதிமுகவில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்றும் டிடிவி தினகரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வந்தபின்னர் அதிமுகவுடன் அம்முக இணையும் வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன், '18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கும். இந்த தீர்ப்பு வெளியானவுடன் ஈபிஎஸ் ஆட்சி கவிழும். அந்த சமயத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட ஒருசிலர் தவிர மற்ற அனைவரும் அம்முகவில் சேர்வார்கள். நாங்கள் அதிமுகவில் இணைய வேண்டிய அவசியமே இருக்காது என்று கூறினார்.
மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியாக இருப்பதாகவும், வரும் 15-ந் தேதிக்குள் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கை நிர்ணயித்துள்ளோம் என்றும் தினகரன் கூறினார்.
மேலும் மக்கள் விரும்பாத, லஞ்சம், ஊழல் நிறைந்த ஆட்சி தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த ஆட்சி கவிழ்ந்து மக்கள் விரும்பும் ஆட்சி வரும் என்றும் தினகரன் தெரிவித்தார்.