சிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை வருடம் முடிந்துவிட்டது. கணக்கு படி சசிகலா 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலை ஆகி வெளியே வர வேண்டும்.
ஆனால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யும் முயற்சியில் இளவரசியின் மகன் விவேக் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மும்முறமாக ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டதால் வேறு வழியில் முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. ஏற்கனவே சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் தினகரன் ஆகியோர் டெல்லியில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் சில முயற்சிகள் செய்தனர். ஆனால், அவை தோல்வியில் முடிந்தது.
எனவே, தற்போது கர்நாடக அரசின் உதவியை எதிர்நோக்கி அவர்கள் காத்திருக்கின்றனர். அதாவது, கர்நாடக முதலமைச்சர் குமாராசாமி, முதல்வராவதற்கு முன்பே இளவரசியின் மகன் விவேக் அவரை சந்தித்து நட்பு வைத்துக்கொண்டார். முதல்வரான பின்பும் 2 முறை அவரை சந்தித்து சசிகலாவின் விடுதலை குறித்து பேசியுள்ளார். ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்தது, விடுமுறை நாட்கள், தலைவர்கள் பிறந்தநாள், நன்னடத்தை என பல காரணங்களை காட்டி சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யும் முயற்சியில் விவேக் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
அரசு நினைத்தால் நன்னடைத்தை காரணம் காட்டி ஒரு கைதியை எப்போது வேண்டுமானாலும் விடுதலை செய்யலாம். ஆனால், சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது. சசிகலாவின் விடுதலைக்கு இது தடைக்கல்லாக இருக்கிறது. எனவே, இந்த விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, எல்லாம் சுபமாக முடிந்த பின் கண்டிப்பாக உதவி செய்கிறோம் என குமாரசாமி தரப்பில் விவேக்கிற்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளதாம்.
கடந்த 18ம் தேதி சசிகலா தனது பிறந்த நாளை சிறையில் எளிமையாக கொண்டாடினார். அப்போது, தினகரன், அவரின் மனைவி அனுராதா உள்ளிட்ட பலர் அவரை சந்தித்தனர். அப்போது, விரைவில் நல்ல செய்தி வரும். சென்று வாருங்கள் என சசிகலா நம்பிக்கை கொடுத்தாராம். எனவே, சசிகலா விரைவில் வெளியே வந்துவிடுவார் என்கிற நம்பிக்கையில் அவரின் குடும்பத்தினர் இருக்கிறார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 1996ம் ஆண்டு சில காலம் சசிகலா சிறையில் இருந்தார். அதேபோல், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் குன்ஹா தீர்ப்பு அளித்த போதும் சில மாதங்கள் அவர் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சசிகலா வெளியே வந்தால், தனக்கு சாதகமாக தமிழக அரசியல் களம் மாறும் என்ற நம்பிக்கையில் தினகரன் இருக்கிறார்.
உளவுத்துறை மூலம் இந்த தகவலை அறிந்த முதல்வர் எடப்பாடி தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாம். சசிகலா வெளியே வந்தால் ஆட்டையை களைப்பார் என்பதால், அந்நிய செலவாணி மோசடி வழக்கை அடுத்த ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.