நேற்று சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். மதுபான கொள்கை விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக கூறப்பட்ட புகாரை அடிப்படையாக கொண்டு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது நண்பன் ஜெயமுருகன் நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை நடந்து வருகிறது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் ஒப்பந்ததாரர் அலுவலகம், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. அதேபோல், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள மதுபான ஆலையிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் அதிகாரிகள் விளக்கம் அளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.