கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உலா வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் கோவை தடாகம் அடுத்த நஞ்சுண்டாபுரம் ஊருக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டிகள் உட்பட எட்டு காட்டு யானைகள் உலா வந்தது. ஊருக்குள் வந்த யானைகள் சாலையோரம் இருந்த சில செடிகளை பிடுங்கி திண்று விட்டு சென்றது. இதனை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
புத்தாண்டின் முதல் நாளே காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு காட்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் இந்த ஆண்டாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்