மக்களவை தேர்தல் வேட்பாளர்களை நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்த நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனது மகன் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது. தமிழ் தேசியக் கொள்கையை மையமாக கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பிறகு சமீபத்தில்தான் அந்த கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.
அதை தொடர்ந்து அவர் பேசியபோது “எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கண்டு பல பேர் நெஞ்சடைத்து சாகப் போகிறார்கள். எல்லாம் சின்ன சின்ன இளைஞர்களை 150 தொகுதிகளில் போட்டியிட செய்யப் போகிறேன். அதில் என் மூத்த மகனும் ஒருவன். அவனிடம் பேசினேன். அவனும் அதற்கு ஒத்துக் கொண்டான். நானும் அந்த தேர்தலில் போட்டியிடுவேன். நான் தான் அவர்களுக்கு கேப்டன், வழிகாட்டி” என்று பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தொடங்கி இத்தனை காலத்தில் சீமான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பெரிதாக பேசியிராத நிலையில் 2026ம் ஆண்டில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலில் தானும், தன் மகனும் போட்டியிடப்போவதாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வாரிசு அரசியலை தொடர்ந்து விமர்சித்து வந்த சீமான் தற்போது தனது கட்சியில் வாரிசு அரசியலை தொடங்கி வைக்கிறாரா? என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.