மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனை தங்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்ய திமுக தோழமை கட்சிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளன.
மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். ம.நீ.மவுக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசன் 39 தொகுதிகளிலும் திமுக தோழமை கட்சிகளுக்கு ஆதரவாக சூறாவளி சுற்றுப்பயண பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக இல்லாத நிலையில் பிரச்சார பணிகள் திமுக தரப்பில் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட உள்ள நிலையில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் தனக்காக தனது தொகுதிக்கு வந்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல கமல்ஹாசனை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தேர்தலில் குறைவான பிரச்சாரங்களிலேயே கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியின் முக்கிய பிரச்சாரகர்களாக உதயநிதி ஸ்டாலினும், கமல்ஹாசனும் செயல்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.