நடிகர் பிரகாஷ்ராஜ் நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்ததை அடுத்து, அவரது வருகைக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மூத்த எம்.பி. சப்தகிரி சங்கர் தலைவராக உள்ள நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெறவிருந்தது. இதில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்டப் பல கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நடிகர் பிரகாஷ்ராஜ் வருகை தந்திருந்த நிலையில், பாஜக எம்.பி.க்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள பிரகாஷ்ராஜ் எதற்காக வந்துள்ளார்? மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் அவர் இங்கு அழைக்கப்பட்டது யார்?" என்று பாஜக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர், யாரை அழைக்க வேண்டும் என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு, சபாநாயகரின் ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனாலும், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். இந்த குழுவில் மொத்தம் 29 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ள நிலையில், 14 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ளத் தயாராக இருந்ததால், கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிரகாஷ்ராஜ் கலந்து கொள்ள இருந்ததாலேயே நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டமே ரத்து செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.