டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த நிலையில் கூட்டணி பற்றி பேசுவதற்கு நிபந்தனைகள் வைத்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணித்ததும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேசுவதற்காக எடப்பாடி பழனிசாமி சென்றாரா என்று பேசிக்கொள்ளப்பட்ட நிலையில், மக்கள் பிரச்சினைக்காகவே அமித்ஷாவை சந்திக்க சென்றதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஆனால் இது சட்டமன்ற கூட்டணிக்கு முந்தைய பேச்சுவார்த்தை அடிப்படையிலான சந்திப்புதான் என கிசுகிசுக்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
முக்கியமாக தேர்தல் கூட்டணி பற்றி பேச வேண்டுமென்றால் பாஜக இதையெல்லாம் செய்ய வேண்டும் என சில முக்கிய நிபந்தனைகளை விடுத்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.
பாஜக தமிழக தலைவரான அண்ணாமலையை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் அல்லது தேர்தல் கூட்டணி மற்றும் முடிவுகள் என எதிலும் அவர் ஈடுபடக்கூடாது, முழுவதும் பாஜக டெல்லி தலைமையே பேச வேண்டும் என முக்கியமான ஒரு நிபந்தனையை வைத்துள்ளாராம்.
மேலும் தங்களது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோர் இந்த கூட்டணியில் நீடிக்கக்கூடாது என்பது இரண்டாவது முக்கிய நிபந்தனையாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்
அதுமட்டுமல்லாமல், அதிமுக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும், எத்தனை தொகுதிகள் பிரித்து தருவது என்பதை முடிவெடுக்க அதிமுகவிற்கு அதிகாரம் என பல நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து பாஜக தலைமை ஆலோசித்து அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது..!
Edit by Prasanth.K