மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லியில் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் "எல்லாம் நன்மைக்கே" என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறாது என்று அதிமுக தலைவர்கள் கூறிவந்த நிலையில், நேற்று திடீரென அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அவருடன் அதிமுக பிரமுகர்களும் உடன் இருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது கூட்டணி குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும், இதற்குப் பிறகு அமித்ஷா தனது ட்விட்டரில், "2026ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்" என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது குறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "எல்லாம் நன்மைக்கே" என்று ஒரே வரியில் பதில் கூறிவிட்டு, அதன் பின்னர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.