சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
மணப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
மேலும், டாஸ்மாக் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகனின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தேனாம்பேட்டை, சூளைமேடு, கல்யாணபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், டாஸ்மாக் ஊழலுடன் தொடர்புடையதாக கூறப்படும் எஸ்.என்.ஜே அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ரூ.1000 கோடி அளவிலான நிதிமீறல் சம்பந்தமான புகாரின் அடிப்படையில் விசாகனை, அவரது மனைவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
காலையிலிருந்தே நடந்து வரும் சோதனையில், விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள், டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.