தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னையில் போதைப்பொருள் கும்பல் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து போதைப் பொருட்கள் மட்டுமின்றி நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வரும் நிலையில், பெரும்பாக்கம் ராஜா மற்றும் சத்தியசீலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து நான்கு கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஐந்து நாட்டு துப்பாக்கிகள் மற்றும் எண்பது தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் மட்டுமின்றி ஆயுத விற்பனைகளிலும் அவர்கள் ஈடுபட்டார்களா? என்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்கு இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.