Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு..  ராமதாஸ் கண்டனம்..!

Mahendran

, வெள்ளி, 5 ஜூலை 2024 (18:15 IST)
கர்நாடகா அணைகள் நிரம்பி வரும் நிலையில் உண்மை முகத்தை கர்நாடகா காட்டுகிறது என்றும் அதை வழக்கம்போல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைகள் கூறி இருப்பதாவது:
 
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கபினி அணை அடுத்த இரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்திற்கான பங்கை தராமல், பாசனத்திற்கான தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள கர்நாடம் முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.
 
கர்நாடகத்தின் குடகு மலை மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி. கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி  4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 26,156 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நான்கு அணைகளின் கொள்ளளவு 59.93 டி.எம்.சியாக அதிகரித்துள்ளது. இது நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 52%க்கும் அதிகம். அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளில் கடந்த ஜூன் 24ஆம் தேதி நிலவரப்படி 37.96 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு வெறும் 4,448 கன அடி என்ற அளவில் தான் இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 43,506 கன அடி என்ற அளவை எட்டி,  அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் காவிரி அணைகளுக்கு 22 டி.எம்.சி தண்ணீர் வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. மொத்தம் 19.52 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட கபினி அணை நிரம்புவதற்கு  இன்னும் ஒரு டி.எம்.சி தண்ணீர் மட்டுமே தேவை. இதே அளவில் நீர்வரத்து தொடர்ந்தால், அடுத்த இரு நாட்களில்  கபினி அணை நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது. இம்மாத இறுதிக்குள் நான்கு அணைகளும் நிரம்பும் வாய்ப்பு இருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
 
கர்நாடகத்தில் காவிரி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தான் நியாயம் ஆகும். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர்  விடுவது எந்த அறிவிப்பையும்  வெளியிடாத கர்நாடக அரசு, வரும் 8ஆம் தேதி முதல் கர்நாடக பாசனத்திற்காக பாசனக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதன் மூலம் காவிரி சிக்கலில் கர்நாடகம் வழக்கம் போல், அதன் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது.
 
காவிரி நீர்ப்பகிர்வு வழக்கில் 2018ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி என இம்மாத இறுதிக்குள்ளாக 44 டி.எம்.சி  தண்ணீரை திறந்து விட வேண்டும். ஆனால், இதுவரை ஒரு டி.எம்.சி தண்ணீரைக் கூட  தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கவில்லை. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது.
 
தமிழ்நாட்டில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12&ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததை காரணம் காட்டி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதனால், காவிரி பாசன மாவட்டங்களில் மொத்தம் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக குறுவை சாகுபடி செய்வதற்கு பதிலாக  ஒரு லட்சம் ஏக்கருக்கும் குறைவான பரப்பில் தான் சாகுபடி செய்யப் பட்டிருக்கிறது. குறுவை சாகுபடி பரப்பை  அதிகரிக்கவும், சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளை தொடங்கவும்  மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
 
ஆனால், காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான தமது கடமையை கர்நாடக அரசு உணர மறுப்பதும், காவிரியில்  தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காமல் இருக்கும் தண்ணீர் முழுவதையும் தாங்களே பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பதும் நியாயமற்றதாகும். கர்நாடகத்தின் இந்த செயல்களை கண்டு கொள்ளாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும், கர்நாடகத்திடமிருந்து காவிரியில் தண்ணீர் பெற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பதும் காவிரி பாசன மாவட்ட உழவர்களூக்கு இழைக்கப்படும் துரோகம். இதை அனுமதிக்க முடியாது.
 
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்து விட்டு, உறங்கும் போக்கை கைவிட்டு, நமது உரிமைகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து  விடும்படி வலியுறுத்த வேண்டும். அதன் மூலம் காவிரி டெல்டா உழவர்களை அரசு காப்பாற்ற வேண்டும் 
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!