Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனியும் தாமதிக்காமல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துக.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!!

Advertiesment
Anbumani

Senthil Velan

, செவ்வாய், 2 ஜூலை 2024 (12:51 IST)
இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கோடை விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் வரும் 8ஆம் நாள் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு எந்த நேரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 69% இடஒதுக்கீட்டின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் ஆபத்தை உணராமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
 
தமிழ்நாட்டில் 1980ஆம் ஆண்டு முதல் 68% இட ஒதுக்கீடும், 1989ஆம் ஆண்டு முதல் 69% இட ஒதுக்கீடும் நடைமுறையில் உள்ளன. 1992ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கில், இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டை தாண்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க 1994ஆம் ஆண்டில் சிறப்பு சட்டம் இயற்றிய தமிழக அரசு, அதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்த்தது. தமிழகத்தில் 50%க்கும் கூடுதலாக இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து சில சமூக அநீதி சக்திகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
 
வழக்கமாக ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட பொருட்கள் குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த முடியாது. ஆனால், ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட பொருள்களும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவையே என்று 11.01.2007-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி விசாரணை மேற்கொண்டது.
 
69% இட ஒதுக்கீட்டு வழக்கில் 13.07.2010&ஆம் தீர்ப்பளித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு, “69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்” என்று ஆணையிட்டது. ஆனால், அப்போதிருந்த தமிழக அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் 2012-ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 69% இட ஒதுக்கீட்டை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? என்று வினா எழுப்பினர். ஆனால், அதற்கு தமிழக அரசின் சார்பில், பழைய புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டதாகவே பதிலளிக்கப்பட்டது. 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு கடைசியில் 03.03.2021&ஆம் நாள் விசாரணைக்கு வந்த போது, மராத்தா இட ஒதுக்கீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
 
இதற்கிடையே, 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தினேஷ் என்பவர் புதிய வழக்கை தொடர்ந்திருப்பதால் இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மாராத்தா இட ஒதுக்கீடு செல்லாது என்று 2021 ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் மீதான சீராய்வு மனு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு இம்மாதம் 8ஆம் தேதி கோடை விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து 69% இடஒதுக்கீடு வழக்கும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
 
உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தவறி விட்ட நிலையில், அதை உச்சநீதிமன்றம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. 69% இடஒதுக்கீட்டை நியாயப் படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை? என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால், அதற்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. அரும்பாடுபட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது தமிழக அரசின் சார்பில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
 
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு 69% இட ஒதுக்கீட்டின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி ஆகும். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படவில்லை என்ற காரணத்தை முன்வைத்து 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் அதன் விளைவுகளை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. அப்படி நடந்தால் தமிழ்நாட்டில் சமூகநீதியை படுகொலை செய்த பெரும்பழி திமுக அரசு மீது தான் விழும். அத்தகைய சூழலை திமுக அரசு ஏற்படுத்தக்கூடாது.
 
தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கடினமான ஒன்றல்ல. தமிழக அரசுக்கு இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ஒரு மாதத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். இத்தகைய கணக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரத்தை தமிழக அரசுக்கு 2008&ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் வழங்குகிறது. அதை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கும் நிலையில், புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக அரசு தயங்கக் கூடாது.
 
தமிழ்நாட்டில் தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69% இட ஒதுக்கீடு ஆகும். அதைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட கணவன்! அடித்து உரித்த மனைவி, மாமியார்!