Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முழுமையான சமூக நீதி எப்போது கிடைக்கும்? டாக்டர் ராமதாஸ் ஆதங்கம்..!

Advertiesment
ramadoss
, செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (14:41 IST)
மத்தியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களில் 4 சதவீதத்தினர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். முழுமையான சமூக நீதி கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
 
இந்தியா முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில்  பணியாற்றும்  1341 பேராசிரியர்களில் 60 பேர், அதாவது 4 விழுக்காட்டினர் மட்டுமே  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 2817 இணைப் பேராசிரியர்களில் 187 பேர், அதாவது 6 விழுக்காட்டினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில்  தெரியவந்திருக்கிறது. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில்  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு 1990-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு 34 ஆண்டுகள் ஆகியும் பேராசிரியர் பணிகளில் ஓபிசி வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 4 விழுக்காட்டைத் தாண்டாதது அதிர்ச்சியளிக்கிறது.
 
பட்டியலினத்தவருக்கான பிரதிநிதித்துவமும் 10 விழுக்காட்டைத் தாண்டவில்லை; பழங்குடியினர் பிரதிநிதித்துவமும் 5 விழுக்காட்டைத் தாண்டவில்லை.  அதே நேரத்தில் உயர்வகுப்பினர் நிரம்பியுள்ள பொதுப்பிரிவினரின் பிரதிநிதித்துவம்  பேராசிரியர் பணியிடங்களில் 85 விழுக்காடாகவும், இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 82 விழுக்காடாகவும்  உள்ளது.  மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் சமூகநீதி எந்த அளவுக்கு சூறையாடப்படுகிறது என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.
 
27% இட ஒதுக்கீட்டை  நடைமுறைப்படுத்துவதில்  திட்டமிட்டு செய்யப்படும் சதிகள் தான் சமூகநீதி சூறையாடல்களுக்கு காரணம் ஆகும். பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணிகளுக்கு ஓபிசி வகுப்பில் தகுதியானவர்கள் இருந்தாலும் கூட, அவர்கள் கிரீமிலேயர்கள் என்று கூறி, அவர்களுக்கு  இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. அவர்களைத்  தவிர மற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்று கூறி  வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. இவ்வளவையும் செய்து விட்டு, ஓபிசி பிரிவில் தகுதியானவர்கள் இல்லை என்று கூறி, அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, உயர்சாதியினரைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.  இப்படித்தான் சமூகநீதி சூறையாடப்படுகிறது. ஓபிசி வகுப்பினருக்கு முழுமையான சமூகநீதி  இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கிடைக்கும் என்பது தெரியவில்லை.
 
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதி சூறையாடப்படுவதை தவிர்க்க, முதல் நடவடிக்கையாக கிரீமிலேயர் முறை ஒழிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் முழுக்க முழுக்க அவர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும்; அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படக் கூடாது.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு இதுவரை நிரப்பப்படாமல் இருக்கும் அனைத்து பணியிடங்களும், பின்னடைவு பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றை ஓபிசி வகுப்பினரைக்  கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்எல்சி-க்கு அடிமையாக செயல்படுகிறது தமிழக அரசு: அன்புமணி குற்றச்சாட்டு..!