நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்பிருந்தும் தோல்வியை தழுவியது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 183 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய சி எஸ் கே அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்ததால் தடுமாற்றத்தோடு விளையாடியது. சென்னை அணியின் ஐகான் தோனி, 11 ஆவது ஓவரிலேயே களமிறங்கினாலும் அவர் ஆடிய நிதான ஆட்டத்தால் சென்னை அணியால் வெற்றிப் பெற முடியவில்லை.
இந்த போட்டியில் மைதானமே மெதுவாக இருந்தது. அதனால்தான் தோனி உள்ளிட்ட பல பேட்ஸ்மேன்கள் பந்துகளைக் கணிக்க தடுமாறினர். இந்நிலையில் இந்த போட்டியில் நிதானமாக ஆடி 50 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார் கே எல் ராகுல். போட்டி முடிந்ததும் பேசிய அவர் “இந்த தொடருக்கு முன்னால் நான் தொடக்க ஆட்டக்காரனாக விளையாடவே பயிற்சி செய்தேன். ஆனால் திடீரென அணியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக என்னை நடுவரிசையில் விளையாட சொன்னார்கள். ஆனால் இன்று திடீரென தொடக்க பேட்ஸ்மேனாக ஆட வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.