கோவை தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், "திராவிட மாடல் அரசு பெண்களுக்கு துரோகம் செய்யும் அரசாக உள்ளது" என்றும், இதை வீடு வீடாக எடுத்து செல்லும் பணியை மகளிர் அணி மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கவலைப்படாமல், இந்து சமய உரிமைகளை அரசு மதிக்கவில்லை என்றும், இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த பணம் கேட்பதாகவும் அவர் சாடினார்.
அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் நல்லுறவு நீடிப்பதாக உறுதி செய்தார். வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஈ.பி.எஸ். உறுதியாக இருக்கிறார் என்றார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதற்றமாக இருப்பதற்கு காரணம், கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்தும் SIR நடவடிக்கையை எதிர்க்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.