உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடிக்கடி புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக நகராட்சி தலைவியின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் சோளிங்கர் நகராட்சி தலைவியாக உள்ளார். இவரது கணவர் அசோகன், திமுக செயற்குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சோளிங்கரில் உள்ள தக்கான் குளக்கரை அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் தமிழ்ச்செல்வி இரண்டு அடுக்கு மாடி கட்டிடத்தை கட்டி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், ஆக்கிரமிப்பு செய்த கட்டிடத்தை இடித்து அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை அடுத்து, சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி, நகராட்சி கமிஷனர் நந்தினி ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இன்று இடிக்கப்பட்டது. வீடு இடிக்கப்பட்டபோது சோளிங்கர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இடிக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி என்று கூறப்படுகிறது.
திமுக நகராட்சி தலைவியின் வீடு நீதிமன்ற உத்தரவால் இடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.