விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தி.மு.க. வடக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார்.
கூட்டத்தில், டிசம்பர் 4ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது மற்றும் வாக்காளர் சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழ்நிலைகள் மாறினாலும், தி.மு.க-வுக்கு கவலையில்லை என்று உறுதியளித்தார்.
அவர், "எந்த கூட்டணி யாருடன் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. நரி வலம் வந்தாலும், இடம் சென்றாலும் நமக்கு தொடர்பில்லை" என்று அழுத்தமாக கூறினார். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைக்கும் கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணியாகவே இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அரசியலில் எந்தப் புயல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க. தயாராக உள்ளது என்றும், மதச்சார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணி வலுவாகத் தேர்தலை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் அழைப்பு விடுத்தார்.