தமிழ்நாட்டில் ஆளும் திமுகவிற்கும், ஆளுனர் ஆர்.என்.ரவிக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுனரை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
கடந்த சில காலமாக தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவியின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் ஆளும் திமுக அரசுடன் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. நேற்று நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுனர் உரையில் இடம்பெற்ற திராவிட மாடல், தமிழ்நாடு, அண்ணா உள்ளிட்ட சில வார்த்தைகளை நீக்கி பேசினார்.
அவரது இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஆளுனர் பாதியிலேயே கூட்டத் தொடரிலிருந்து வெளியேறினார். ஆளுனர் சட்டசபை நாகரிகத்தை பின்பற்றவில்லை என்று திமுகவினரும், திமுக அரசு செய்தது தவறு என எதிர்கட்சிகளும் பேசி வருகின்றன.
இதனால் நேற்று முதலாக ட்விட்டரில் Get out Ravi, Tamilnadu, உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆளுனரை கண்டித்து ட்விட்டர் நம்பர் 1 ட்ரெண்டிங் #GetOutRavi” என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளன.