அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைபாடு என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் தமிழ் நாடு, திராவிட நாடு போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்தார். இதனை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்கு, ஆளுங்கட்சி, அதிமுக, பாமகவினர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது. அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைபாடு.
அதே நேரத்தில், அரசியல் சட்டப்படி, அந்தப் பதவி இருக்கும் வரை அதிலிருப்பவருக்கு அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். இதைப்போன்றே, மரபுகளை உடைத்துவிட்டு, சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டதும் சரியானதல்ல.
ஆளுநருக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே தொடரும் இத்தகைய மோதல்போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு மக்களுக்கும், மாநிலத்துக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தும்என்று தெரிவித்துள்ளார்.