பொய் செய்தி வெளியிட்ட தினமலர் – ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு தலா 2 ஆண்டு சிறை !

சனி, 7 செப்டம்பர் 2019 (09:14 IST)
தவறான, ஆதாரங்களற்ற செய்தியினை வெளியிட்ட தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் கடந்த 2005 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் முத்தமிழ் முதல்வன். அப்போது தினமலர் நாளிதழில் வரும் டீக்கடை பெஞ்ச் பகுதியில் இவர் சட்டவிரோதமாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபானங்கள் கடத்துவதை அனுமதித்து அதற்காக லஞ்சம் பெற்றதாகவும், அந்த லஞ்சப்பணத்தில் சொத்து வாங்கியதாகவும் செய்தி வெளியிட்டது.

இதனால் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வன், தினமலரிடம் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் பதிலளிக்காததை அடுத்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான தினமலர் வழக்கறிஞர் ‘செய்தி வெளியிடுவது நாளிதழ்களின் உரிமை’  என வாதாடினார்.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. தீர்ப்பில் ‘இந்த செய்தி ஆதாரங்களோடு வெளியிடப்படவில்லை. ஆனால் யூகங்களின் அடிப்படையில் வெளியான செய்தியில் ஏன் அதிகாரியின் பெயரைக் குறிப்பிடவேண்டும் ‘எனக் கேட்டு  தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என தீர்ப்பளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் திருப்பதி விஐபி கட்டண உயர்வு – தேவஸ்தான கமிட்டியின் மாஸ்டர் பிளான் !