லட்சக்கணக்கான வைரங்களை திருடிய திருடன் ஒருவன் தற்செயலாக வடை சாப்பிட வந்த போலீசிடம் சிக்கிய சுவாரஸ்யமான சம்பவம் சென்னை தி.நகரில் நடந்துள்ளது.
சென்னை தி.நகரில் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு வைரங்களை விற்க பாஸ்கர் என்பவர் சொகுசு ஓட்டல் ஒன்றுக்கு வந்துள்ளார். இவருடன் வைரக்கற்களுக்கு சொந்தக்காரரான செல்வம் என்பவரும் வந்துள்ளார். அரசியல் பிரமுகரிடம் வைரத்திற்கான பேரம் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர்கள் அசந்த நேரத்தில் வைரங்களை எடுத்து கொண்டு பாஸ்கர் தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார்களும் தி.நகர் பகுதியில் வைரங்களுடன் தப்பியோடிய பாஸ்கரை பிடிக்க வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தி.நகர் பேருந்து நிலையத்திற்கு வந்த பாஸ்கர் அங்கே ஓரு டீக்கடையில் டீ சாப்பிட உட்கார்ந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த திநகர் போலீசார் வடை, டீ சாப்பிட பாஸ்கர் உட்கார்ந்திருந்த டீக்கடை முன் ஜீப்பை நிறுத்தினர். போலீசார் தன்னைத்தான் மோப்பம் பிடித்து வந்துவிட்டதாக தவறாக எண்ணிய பாஸ்கர், போலீசாரை பார்த்ததும் ஓடத்தொடங்கினர்.
டீக்குடிக்க வந்த தங்களை பார்த்து ஒருவர் ஓடுவதை பார்த்த போலீசார் பாஸ்கரை விரட்டி பிடித்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் வைரத்திருடன் இவன் தான் என்பதை உறுதி செய்த போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சினிமா பாணியில் தனது முட்டாள்தனத்தால் வைரத்திருடன் போலீசிடம் சிக்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது