சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி யில், சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனிமாதத்தில் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும்.
இந்நிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையால் 2002 முதல் 2006 வரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட நிர்வாகமே முன் நின்று தேரோட்டத்தை நடத்திய நிலையில், கோவில் தேர் பழுதடைந்து மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
தேர் புதுப்பிக்கப்பட்டும் தேரோட்டம் நடத்தப்படாததால் கண்டதேவி ஊர் முக்கியஸ்தர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தேரோட்டம் நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடுத்தார்.
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் நடத்திய சமாதான கூட்டத்தில், அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்த்து தேரோட்டம் நடத்த முடிவானதை அடுத்து,இன்று காலை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது, கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் கோவிலை சுற்றி சுமார் ஒன்னரை கிலோ மீட்டர் தூரம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு தென் மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 5 டி.ஐ.ஜி ,12 எஸ் பி உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டதேவியை சுற்றிலும் 18 சோதனை சாவடிகள், 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விரிவானபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது