Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்!

தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்!

J.Durai

திருச்சி , திங்கள், 22 ஏப்ரல் 2024 (15:36 IST)
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
 
அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது.
 
இதில் 5-ம் நாள் அன்று சிவபக்தியில் சிறந்த செட்டிப் பெண் ரத்தினாவதிக்கு  அவளது பேறுகாலத்தில் தாய் வர முடியாத காரணத்தால், அவளது தாயாக சிவபெருமான் வந்து பேறுகாலத்தில் மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.
 
6-ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
தொடர்ந்து 9-ம் நாளான நேற்று அதிகாலை 4.30  மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில் சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமான சுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர். 
 
பின்னர் 6.10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இந்த தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
 
தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல,அதை தொடர்ந்து கோயில் யானை லட்சுமியும் செல்ல பெரிய தேரையும்,சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். 
 
இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு வகையான மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது.  
 
இந்த சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் கலந்து கொண்டு சிவ சிவா, தாயுமான ஈசா, ஆரூரா என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு..! 34ஆவது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!