திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் ரயில் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை அடுத்து, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
எண்ணூரில் இருந்து 52 டேங்கர் பெட்டிகளில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த ரயில் ஒன்று, இன்று அதிகாலை மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் ரயில் நிலைய மேம்பாலத்தை கடக்கும்போது திடீரென எஞ்சின் தடம் புரண்டது. இதனை அடுத்து, கச்சா எண்ணெய் டேங்கரில் உராய்வு ஏற்பட்டதால் தீப்பற்றி எரிந்தது.
அடுத்தடுத்து ஏழு டேங்கர்களில் தீ மளமளவென பரவியதாகவும், ஒவ்வொரு டேங்கரிலும் 7 ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் குறித்த தகவலைத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:
சென்னை - மைசூரு வந்தே பாரத் (20607)
சென்னை - மைசூரு சதாப்தி (12007)
சென்னை - கோவை இன்டர்சிட்டி (12675)
சென்னை - கோவை சதாப்தி (12243)
சென்னை - திருப்பதி சப்தகிரி (16057)
சென்னை - பெங்களூரு செல்லும் ரயில்கள் (22625, 12639)
சென்னை - மகாராஷ்டிரம் நாகர்சோல் (16003)
இதுதவிர, சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் என 15 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.