மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில், தேர்வு நடைபெற்று கொண்டிருந்தபோது, மாவட்ட ஆட்சியர் ஒரு கல்லூரி மாணவரை பலமுறை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிந்த் மாவட்டத்தில் பரீட்சை நடந்து கொண்டிருந்தபோது, அந்த மாவட்டத்தின் ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, தேர்வு நடைபெற்ற மையத்திற்கு வந்து சோதனை செய்தார். அப்போது ஒரு மாணவரை திடீரென கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார். அதன்பின் அந்த மாணவரை இன்னொரு ஆசிரியரும் அடித்ததாகவும், தேர்வு அறையிலிருந்து வெளியேற்றியதாகவும் தெரிகிறது. இது குறித்து அந்த மாணவர், "மாவட்ட ஆட்சியரின் தாக்குதலால் தனது காது பாதிக்கப்பட்டதாக" குற்றம் சாட்டினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தபோது, "அந்த மாணவர் தனது விடைத்தாளை ஜன்னல் வழியாக வெளியே கொடுத்து, வேறொருவர் மூலம் பரீட்சை எழுதி, அதன்பின் மீண்டும் அதை வாங்கி உள்ளார் என்றும், இப்படி ஒரு ஒழுக்கமற்ற பரீட்சையை அனுமதிக்க முடியாது" என்றும் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் இந்த கல்லூரியில் தேர்வு எழுத அனுமதி வழங்கக்கூடாது என பரிந்துரை செய்ய போவதாகவும் கூறினார். அந்தக் கல்லூரி மத்தியப் பிரதேச மாநில எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஹேமந்த் என்பவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
"ஒரு மாணவர் பரீட்சையில் தவறு செய்திருந்தால், அவருக்கு கல்லூரி சட்டப்படி தண்டனை அளிக்கலாமே தவிர, மாவட்ட ஆட்சியர் கல்லூரி மாணவரை தாக்குவது சரியானது அல்ல" என்று இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.