தள்ளாத வயதிலும் மானாட மயிலாட பார்த்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும், திமுகவினர் ஆட்சியில் இருக்கும்போது நன்றாக அனுபவிப்பார்கள் என்றும் "அனுபவி ராஜா அனுபவி, இன்னும் ஒரு வருடம் தான்" என்று எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்சியில் இருக்கும் போது அனைத்தையும் அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம். மக்கள் வறுமையில் வாடி, வறட்சியில் இருந்தாலும், தள்ளாத வயதில் மானாட மயிலாட பார்த்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதேபோல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது ஊர் ஊராக சைக்கிள் ஓட்டி விளம்பரம் செய்கிறார்.
இன்னொரு பக்கம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில், தனது மகனுடன் வந்த துணை முதல்வர், மாவட்ட கலெக்டரை இருக்கையிலிருந்து எழ வைத்திருக்கிறார். இந்த ஆட்சியில் அதிகாரிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது, உலகின் பல பகுதிகளில் இருந்து வந்த அறிஞர்கள் கீழே அமர வைக்கப்பட்டார்கள், ஆனால் கலைஞர் குடும்பம் மட்டுமே மேடையில் அமர வைக்கப்பட்டார்கள்.
"இன்னும் ஒரே ஒரு வருடம் தான். நான் அதற்குள் எவ்வளவு அனுபவிக்க வேண்டுமோ, அவ்வளவு அனுபவித்துக் கொள்ளுங்கள். எம்ஜிஆரை யாரும் வென்றது கிடையாது; கடவுளை யாரும் கண்டது கிடையாது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மீண்டும் வருவார்," என்று செல்லூர் ராஜூ கூறினார்.