விழுப்புரத்தில் தொடர்ச்சியாக 30 மணி நேரம் மழை பெய்து வருவதாகவும், அதேபோல் புதுவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத மழை பெய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரம் முழுவதும் மழைநீர் தேங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மழை தொடங்கிய நிலையில், முப்பது மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும், இதன் காரணமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஐந்து அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாக மாறி இருப்பதாகவும், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், புதுவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை பெய்து வருவதாகவும், கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அதிகபட்சமாக 210 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், தற்பொழுது 460 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதுவை கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்து வருவதோடு, பாண்டி மெரினாவில் சாலை வரை அலைகள் வந்து செல்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.