பொருளாதார ரீதியான 10 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தமிழகக் காங்கிரஸில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
மோடி தலைமையிலான அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கடந்த 8ஆம் தேதி மக்களவையிலும் 9ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது.இதற்குப் பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகியக் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.ஆனால் பிராந்தியக் கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக எம்.பி. தம்பிதுரை மற்றும் திமுக எம்.பி ஆகியோரின் இட ஒதுக்கீடுக்கு எதிரான பேச்சுகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் இந்த மசோதாவை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தமிழகக் காங்கிரஸில் இருந்து இதற்கு எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது. காங்கிரஸின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, தனது முகநூலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘உயர் சாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டு கால ஒடுக்குமுறையைக் கருத்தில்கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல் சாசனத்துக்கு முரணானது.உயர் சாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீடு கொள்கையை காலப்போக்கில் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்துள்ளது. வருடத்துக்கு 8 லட்சம் வருமானமுள்ளவர்களை ஏழைகளென வரையறுப்பது ஏற்புடையதல்ல. எந்தப் புள்ளி விவரத்தின் அடிப்படையில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனால் தமிழகக் காங்கிரஸூக்குள் சலசலப்புகள் உருவாகியுள்ளன. ஜோதிமணியின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு அதிகமாகிக் கொண்டு வருகிறது.