கோவையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட குழந்தை சில மணி நேரங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மசக்காளி பாளையம் பகுதியில் டிரைவராக பணியாற்றி வருபவர் பிரசாந்த். இவரது மனைவிக்கும் இவருக்கும் கிஷாந்த் என்ற மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், ஜூரம் இருந்து வந்ததால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு குழந்தைக்கு இரண்டரை மாதத்தில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டதா என செவிலியர் விசாரித்துள்ளார். பெற்றோர்கள் தடுப்பூசி போடவில்லை என சொன்னதால் தடுப்பூசி செலுத்திய செவிலியர் சளி மருந்து ஒன்றையும் அளித்துள்ளார்.
ஆனால் வீட்டிற்கு வந்தும் குழந்தை சுகவீனமாக இருந்த நிலையில் சளி மருந்து கொடுத்தபின் தூங்கியுள்ளது. பின்னர் மாலை நேரம் குழந்தையை எழுப்ப முயன்றபோது எழவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை மீண்டும் மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தை உடல்நல குறைவால் இறந்ததா? அல்லது தடுப்பூசி காரணமா? என்பது குறித்து தடுப்பூசி மாதிரியையும் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.