வீடுகட்ட வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை கரையான் தின்ற சோகம்
, வியாழன், 18 பிப்ரவரி 2021 (11:47 IST)
இன்று (18.02.2021) வியாழக்கிழமை இந்தியாவின் சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மைலவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜமலையா. இவர் ஒரு விவசாயி. இவர் வீட்டில் பன்றிகளையும் வளர்த்து வருகிறார். வேளாண் தொழிலில் பல ஆண்டுகளாக உழைத்து சிறிது சிறிதாக பணத்தை சேர்த்த வைத்து இருந்தார்.
அவருக்கு வங்கியில் கணக்கு இல்லாததால் வீட்டிலேயே இரும்பு பெட்டி ஒன்றில் அதனை பாதுகாத்து வைத்திருந்தார். அவர் இருக்கும் வீடும் மிக சிறியது. இதனால் ஜமலையா புதிய வீடு கட்ட முடிவு செய்தார். புதிய வீடு கட்டும் பணிக்கு பணம் தேவைப்பட்டதை அடுத்து பெட்டியை திறந்த ஜமலையா குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீண்டகாலமாக பணத்தை பயன்படுத்தாததால் ரூபாய் நோட்டுகளை கரையான்கள் சில்லறையாக துளைத்துவிட்டன என தினத்தந்தியில் செய்தி பிரசூரமாகி உள்ளது.
பெரும் இன்னல்களுக்கு இடையே சேமித்து வைத்திருந்த ₹5 லட்சத்தை கரையான்கள் உணவாக்கி கொண்டதால் விவசாயி ஜமலையாவின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். வீடுகட்டும் தனது நீண்டநாள் கனவை கரையான்கள் கரைத்துவிட்டதாக விவசாயி வேதனையுடன் தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.