Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை சின்னப்பிள்ளை: பள்ளிக்கே செல்லாமல் பத்மபூஷன் விருது பெற்ற இவர் யார்?

மதுரை சின்னப்பிள்ளை: பள்ளிக்கே செல்லாமல் பத்மபூஷன் விருது பெற்ற இவர் யார்?
, திங்கள், 28 ஜனவரி 2019 (17:23 IST)
பத்மபூஷன் விருது பெற்றிருக்கிறார் மதுரை சின்னப்பிள்ளை. 67 வயதில், அள்ளி சொருகிய கூந்தல். கண்டாங்கி சேலையுடன் காட்சி தரும் இந்த எளிய கிராமத்துப் பெண்மணி யார்?
மதுரை அருகே சுய உதவிக் குழுக்களை அமைத்து ஊரக முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு புகழின் உச்சிக்கு சென்றவர்.
 
இவர் தமிழகத்துக்கு முன்பே அறியப்பட்டவர் அல்லவா?
 
ஆம். சமூக முன்னேற்றத்துக்கு உதவும் பெண்களுக்குத் தரப்படும் 'ஸ்திரீ சக்தி புரஸ்கார்' விருதுக்கு 1999-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், விருது வழங்கும் விழாவில் பங்கேற்றபோது, விருது வழங்க வந்த அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பேயி குனிந்து சின்னப்பிள்ளையின் காலைத் தொட்டு வணங்கினார்.
 
இந்த நிகழ்வின் மூலம் பொதுக் கவனத்துக்கு வந்தார் சின்னப்பிள்ளை. பள்ளிக்கே செல்லாத இவர் தற்போது இந்திய அரசு வழங்கும் நான்காவது உயர்ந்த குடிமை விருதைப் பெறுகிறார்.
 
தொழில் வாய்ப்புகளை உருவாக்கியதற்காக வழங்கப்படும் 'ஜானகிதேவி' விருதினையும் 1999-ம் ஆண்டு பெற்றவர் சின்னப்பிள்ளை.
 
மறைந்த மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி பரிசு தந்து இவரைப் பாராட்டினார்.
 
மறைந்த அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது  திடீரென சின்னபிள்ளை வீட்டிற்கு நேரடியாக சென்றதுடன், சின்னப்பிள்ளையின் பில்லுச்சேரி போல இந்திய கிராமங்கள் மாறவேண்டும் என்று தாம் எதிபார்ப்பதாக குறிப்பிட்டு வியக்கவைத்தார்.
 
"வறுமை கோட்டுக்குக் கீழே இருந்த சூழலில் பிறந்து,  பிறந்தவுடன் தாயை இழந்து, சகோதரியால் வளர்க்கப்பட்டு, திருமணமாகி  கணவர் பெருமாளுடன் மதுரை மாவட்டம் அழகர் கோவில் செல்லும் வழியில் பில்லுச்சேரி என்னும் குக்கிராமத்திற்கு தாம் வந்ததாக வந்ததாக" தெரிவித்தார் சின்னப்பிள்ளை.
 
"வானம் பார்த்த பூமியாக நிலங்கள் இருக்க வந்த இடத்திலும் வறுமை என்பது நீங்காத சொத்தாக இருந்தது," என்றும், கூலி வேலை, வயல் வேலை என கிடைக்கும் வேலைகளை செய்வது தங்களின் வாழ்வாதாரமாக இருந்ததாகவும், அன்றைய காலகட்டத்தில் வட்டிக்கு வாங்கி குடும்பம் நடத்துவதே பெரும்பான்மையான மக்களின் நிலையாக இருந்ததாகவும் குறிப்பிடுட்டார்.
 
1995-ல் தானம் அறக்கட்டளை தலைவர் வாசிமலை அவர்களின் ஊக்கத்தால் தங்கள் கிராமத்தில் சிறுசேமிப்பு வழக்கம் உருவானதாகத் தெரிவித்த சின்னப்பிள்ளை, தன்னுடன் இருந்தவர்கள் தங்களால் சேமிக்க இயலுமா என திகைத்தபோது "முயற்சிபோம் என கூறி,  அறக்கட்டளை வழிகாட்டுதலின்படி" களஞ்சியம் சுய உதவிக் குழுக்களைத் தொடக்கியதாக கூறுகிறார்.
 
ஆரம்பத்தில் 14 நபர்கள் இணைந்து ஆளுக்கு ரூ.20 வீதம் சேர்த்து துவக்கப்பட்டது களஞ்சியம். சேமிப்பு பழக்கத்தினால் தங்களுக்குத் தேவையான பணத்தை குறைந்த வட்டியில் கடனாக பெற முடிந்தது என்று கூறும் சின்னப்பிள்ளை, புல்லு களஞ்சியம், முனுசாமி களஞ்சியம் என 8 களஞ்சியங்கள் துவங்கப்பட்டதாக தெரிவித்தார்.
 
“வாஜ்பேயி காலில் விழுந்ததும் என் கை, கால்கள் நடுங்கின” - மதுரை சின்னப்பிள்ளை
"ஒடுக்கப்பட்ட  மக்கள் தங்கள் தேவைகளை எதிர்கொள்ளும்பொருட்டு இச்சேமிப்பு பழக்கத்தை உருவாக்கியவர்கள், தங்கள் பங்குக்கு ரூ.100 தந்து இத்திட்டத்தை மற்றவர்கள் நலனுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த உதவினர். இரவில் அருகிலுள்ள கிராம மக்களை சந்தித்து இக்களஞ்சியத்தை குறித்து பேசி" மக்களை இணைத்ததாகவும் தெரிவித்தார் சின்னப்பிள்ளை.
webdunia
களஞ்சியத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, நிர்வாக வசதிக்காக, 20 பெண்களுடன் ஒவ்வொரு களஞ்சியமும் இயக்கப்பட்டது என்றும், இக்களஞ்சியங்களை இணைத்து 1998ல் வைகை வட்டாரகளஞ்சியம் எனற ஒருங்கிணைந்த அமைப்பு துவக்கப்பட்டது என்றும், தற்போது 14 மாநிலங்களில் களஞ்சியங்கள் நடப்பதாகவும் கூறினார் சின்னப்பிள்ளை.
 
58 வயதான பிச்சம்மாள் கூறும் போது , படிப்பறிவு இல்லாத நிலையிலும் தேசிய விருதுகள் வாங்குவது கடவுளின் வரம் என்றார்.  சின்னப்பிள்ளையால் தாங்கள் வளர்க்கப்பட்தே பெருமைக்குரிய விஷயமாக கருதுவதாகவும் , இவர்களின் உழைப்புக்கு கிடைத்த பெருமையே இப்பரிசுகள் என்றும் கூறினார்.

களஞ்சியம் தமக்கு மன நிறைவைத் தருகிறது என்றும் இணைந்து செயல்படும் அனைவருக்கும் பாராட்டுகள், விருதுகள் மகிழ்ச்சி அளிக்கின்றன என்று கூறும் சின்னப்பிள்ளை இவற்றைக் காணாமல் தமது கணவர் மறைந்ததை வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார். அரசு சார்பில் தனக்கு  முதியோர் உதவித் தொகை தவிர வேறு உதவிகள் கிடைக்கவில்லை என்றும் அவர் வருத்தத்தோடு கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலி சட்னி: எகிறி குதித்து ஓடிய கல்லூரி மாணவர்கள்: சென்னையில் பதற்றம்