எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, இதழியல், பண்பாட்டு வளர்ச்சிக்காகப் பல்வேறு அரிய பணிகளைச் செயலாற்றி வருகிறது. ஐந்தாம் தமிழ்ச்சங்கமாகச் செயல்பட்டு வரும் தமிழ்ப்பேராயம் தனது பல்வேறு செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கதாக முன்னெடுத்து வருவது தமிழ்ப்பேராய விருதுகள்.
2012 ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக 2 கோடி ரூபாய்க்கும் மேலாக விருதுத் தொகை தமிழ்ப்பேராய விருதுகளுக்காக வழங்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 7வது ஆண்டாக, 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகளை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் தமிழ்ப்பேராயத்தின் புரவலர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள் அறிவித்தார். அந்த அறிவிப்பில் இந்த ஆண்டு 10 வகைப்பாட்டில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 15 லட்சம் பெறுமானமுள்ள தொகை விருதுகளுக்காக வழங்கப்படவுள்ளன என்று குறிப்பிட்டார்.
தமிழ்ப்பேராயம் கவிதை, சிறுகதை – நாவல் – நாடகம், தமிழிசை, ஓவியம், சிற்பம், குழந்தை இலக்கியம், அறிவியல் தமிழ், தமிழியல் ஆய்வு, தமிழ் இதழ், தமிழ்ச்சங்கம், சிறந்த கலைக்குழு, வாழ்நாள் சாதனையாளர் எனத் தமிழின் பல்துறைப்பட்ட வகைப்பாடுகளிலும் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இவ்விருதினை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளது.
இதற்கு முன்பாகத் தமிழ்ப்பேராயத்தில் விருதுகள் பெற்ற பலரும் தொடர்ந்து சாகித்திய அகாதமி விருது (திரு. பூமணி – அஞ்ஞாடி, திரு வண்ணதாசன் – ஒரு சிறு இசை) செம்மொழி நிறுவனத்தின் வழியாகக் குடியரசுத்தலைவர் விருதுகள் ( மூதறிஞர் தமிழண்ணல், முனைவர் செ. வை. சண்முகம், முனைவர் ஆ. தட்சிணாமூர்த்தி) உள்ளிட்ட விருதுகளைத் பெற்று வந்திருப்பது தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் தேர்வு முறையினைத் தனித்து அடையாளப்படுத்துகிறது.
இந்த விருது அறிவிப்பின்போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் இணைத்துணைவேந்தரும் தமிழ்ப்பேராயத்தின் தலைவருமான முனைவர் இர.பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழகத்தின் நிதிமேலாண்மை இயக்குநர் திரு. மு. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் நா. சேதுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
தேர்வுக்குழு நடுவர்கள்
1. மாண்பமை நீதியரசர் முனைவர் பி. தேவதாஸ்
2. முனைவர் ம. இராசேந்திரன்
3. முனைவர் பா.ரா. சுப்பிரமணியன்
4. கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி
5. முனைவர் இரா. சீனிவாசன்