சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் நடைபெறுவதாக போலிச் செய்தியை பரப்பிய 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக வாட்ஸப் உள்ளிட்ட செயலிகளில் குழந்தை கடத்தல் குறித்து பரவி வரும் போலிச் செய்திகளால் பல்வேறு பகுதிகளில் அப்பாவி தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் இவ்வாறான குழந்தைக் கடத்தல் போலிச் செய்தியை நம்பி சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூலி வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த காவல்துறை, குழந்தைகள் கடத்தப்பட்டதாக இதுவரை எந்த புகார்களும் வரவில்லை என்றும், இதுபோன்ற வாட்ஸப் ஃபார்வர்டுகளை நம்பி பொதுமக்கள் பிற நபர்களை தாக்குவது சட்டப்படி குற்றம் என்றும் கூறியிருந்தனர். மேலும் சமூக அமைதியை குலைக்கும் இதுபோன்ற செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
அப்படி இருந்தும் வாட்ஸப்பில் இதுபோன்ற போலிச் செய்திகள் தொடர்ந்து பரவி வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீஸார் திண்டுக்கல், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் இவ்வாறான போலிச் செய்தியை பரப்பிய 5 பேரை கைதுச் செய்துள்ளனர். போலிச் செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.