இமாச்சல பிரதேசத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர், படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய தன் நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு சென்றிருந்தார்.
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஷங் நாலா பகுதியில் இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கடந்த 4ஆம் தேதி கவிழ்ந்தது.
விபத்து குறித்து தகவலறிந்த சென்ற மீட்புப் படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத்தை மீட்டனர். ஆனால், வெற்றி துரைசாமியும், உள்ளூரை சேர்ந்த கார் ஓட்டுநர் தன்ஜினும் காணாமல் போயினர். வெற்றி துரைசாமியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் சட்லஜ் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. இது சைதை துரைசாமியின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, சென்னை, சி.ஐ.டி நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வெற்றி துரைசாமி உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும், தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, இமாச்சல பிரதேசத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த அவரது மகன் வெற்றி துரைசாமியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.