இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு மத்திய அரசு தற்போது தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.
டிக்டாக் மீதான தடையை நீக்குவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், அது மீண்டும் செயல்படுவதாக வெளிவந்த செய்திகள் தவறானவை என்றும் அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால், டிக்டாக் மீண்டும் இப்போதைக்கு இந்தியாவுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டு, கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக்டாக் உள்பட 59 சீனச் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இந்த செயலிகள் இந்திய பயனர்களின் தரவுகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இதுவே, இந்த செயலிகள் மீது தடை விதிக்கப்பட்டதன் முக்கியக் காரணமாகும்.
டிக்டாக் வலைத்தளத்தை சில பயனர்கள் அணுக முடிந்தாலும், அது முழுமையாக செயல்படவில்லை. உள்நுழைந்து வீடியோக்களை பார்க்க முடியவில்லை என்றும், செயலி இன்னும் ஆப் ஸ்டோர்களில் கிடைக்கவில்லை என்றும் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.