நாடு முழுவதும் மத்திய அரசின் அக்னிபாத் ராணுவ பணி திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ராணுவத்தில் 4 ஆண்டுகள் குறுகிய கால பணி அளிக்கும் அக்னிபாத் ராணுவப்பணி திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது, தமிழ்நாடு தலைநகர் சென்னையிலும் போர் நினைவு சின்னம் அருகே 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட சூழலில் சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழுவதும் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நேற்று போராட்டம் நடந்த நிலையில் இன்று நேப்பியர் பாலம் தொடங்கி போர் நினைவுச்சின்னம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொடிமர சாலை முதல் போர்நினைவுச்சின்னம் வரை உள்ள சாலையும் முடக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் மற்றும் அந்த பகுதியில் வசிப்போரின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் அதிகமான போக்குவரத்து நடைபெறும் பகுதிகளான கோயம்பேடு, எழும்பூர், செண்ட்ரல் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.