சென்னையில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தை அடைந்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் சமைக்க வழியில்லாமல் பலர் உணவகங்களையே இழுத்து மூடிவிட்டார்கள்.
தமிழ்நாடு முழுக்கவே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த் முறை தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைக்கிறது. முக்கியமாக தலைநகர் சென்னையில் குடிதண்ணீருக்காக தினம்தோறும் பெரும் யுத்தமே நடக்கிறது.
மத்திய வர்க்க குடும்பங்கள் தனியார் டேங்கர் லாரிகளை நம்பியிருக்க கடைசியாக அவர்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் காலி குடங்களோடு ரோட்டுக்கு வந்து விட்டார்கள். மக்கள் தினம்தோறும் காலி குடங்களோடு வீதி வீதியாக அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தண்ணீர்தான் கிடைக்க வழியில்லை.
இந்த தண்ணீர் பிரச்சினை குடும்பங்களை மட்டுமல்ல பெரிய வணிக நிறுவனங்களையும், பள்ளிகளையும் கூட பாதித்துள்ளது. பல தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோரிடம் “தங்கள் குழந்தைக்கு மறக்காமல் குடிநீர் கொடுத்து அனுப்புங்கள்” என அறிவுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் தண்ணீர் பற்றாக்குறையால் கழிவறையையே இழுத்து மூடிவிட்டார்கள். மேலும் சில நிறுவனங்கள் தண்ணீர் பிரச்சினையால் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தி வருகின்றன.
இந்த பிரச்சினையை எல்லாம் தாங்க முடியாத வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் பலர் சென்னையின் வெளிப்புற பகுதிகளில் குடியேறிவிட்டார்கள். இந்நிலையில் தற்போது உணவகங்களும் தண்ணீர் பிரச்சினையால் மூடப்பட்டு வருகின்றன. சமைப்பதற்கு, பாத்திரம் கழுவுவதற்கு, வாடிக்கையாளர்களுக்கு குடிக்க கொடுப்பதற்கு என ஒரு உணவகத்திற்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு மிக அதிகம். பஞ்சத்தின் துவக்க நாட்களில் தனியார் லாரிகளுக்கு அதிக பணம் கொடுத்துதான் தண்ணீரை பெற்று வந்திருக்கின்றன உணவகங்கள். நாளாக நாளாக தண்ணீர் கிடைப்பதில் அதிக பிரச்சினைகள் ஏற்பட்டதால் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கட்டணத்தை அதிகரித்து விட்டார்கள். அந்த விலைக்கு தண்ணீர் வாங்கி உணவகத்தை நடத்த இயலாது என்பதால் பல உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன.
மேலும் பல உணவகங்கள் உணவு உற்பத்தியை குறைத்து கொண்டுள்ளன. வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பெண்கள் பலர் சமையல் செய்ய முடியாததால் உணவகங்களில்தான் சாப்பிட்டு வருகின்றனர். உணவகங்கள் மூடப்பட்டு வருவதால் பார்க்கும் உணவகங்களில் கிடைக்கும் உணவை சாப்பிட மக்கள் கூட்டம் அலைமோதும் நிலை உருவாக உள்ளது. தற்போது இந்த பிரச்சினையால் உணவு பஞ்சம் ஏற்படும் ஆபத்து உண்டாகியிருக்கிறது.