உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தமிழக விளையாட்டு வீராங்கனைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
தமிழகத்தை சேர்ந்த காது கேளாத மாற்றுத்திறனாளி வீராங்கனை சமீஹா பர்வீன். மாற்றுதிறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இவர் தேசிய தடகள போட்டிகளில் மூன்று முறை தங்க பதக்கம் வென்றவர்.
இந்நிலையில் பர்வீன் உலக காதுகேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். ஆனால் 5 ஆண் வீரர்களுடன் ஒரு பெண் வீராங்கனையை அனுப்ப முடியாது என இந்திய விளையாட்டு ஆணையம் அனுமதி மறுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
அதில் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் “தகுதி போட்டியில் தகுதி பெற்றும் ஒரு பெண் என்பதால் விளையாட அனுமதிக்காமல் தடுப்பது அதிர்ச்சியை தருகிறது” என தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து நாளைக்கு இந்திய விளையாட்டு ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.