சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சொத்து வைத்துள்ள மக்கள் தங்கள் சொத்து வரியை ஏப்ரல் 15க்குள் செலுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை, மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் வாயிலாகவும், மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், உரிமம் ஆய்வாளர்கள் வாயிலாகவும் எளிதாக செலுத்தலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் “2022-23ம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே வருகிற 15-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். 15-ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். தவறும் நபர்களுக்கு 2 சதவீதம் அபராத தொகையுடன் சொத்து வரி வசூலிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.