சென்னையில் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டபோது, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அவர், ஏரிக்கு சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், தன்னிச்சையாக நீரைத் திறப்பது நடைமுறைக்கு எதிரானது. நீர் திறப்பை மக்களுக்கு நான் தான் அறிவிக்க வேண்டும்" என்று அவர் அதிகாரிகளை நோக்கி பேசினார்.
மேலும், இந்தப் புறக்கணிப்புக்கு பின்னால் சாதியவாதம் இருப்பதாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். "பூசணிக்காய் உடைத்து பூசை செய்தும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கவில்லை. உங்கள் துறை சாதிய பெருமிதத்தால் நிறைந்துள்ளது. நாங்கள் நீரை கையால் தொடக் கூடாது என்று நினைக்கிறீர்களா?" என்று அவர் கேள்வியெழுப்பியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.