தமிழகத்தில் வரும் 15,16,17 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில தினங்களாக கிழக்குத்திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது.
இந்த நிலையில், இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் தமிழகம் , புதுச்சேரியில் வறண்டவானிலையே நிலவக்கூடும் என்று கூறியுள்ளது.
மேலும், தமிழகப் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளின் கிழக்குத் திசைக் காற்றும், மேற்குதிசைக்காற்றும் சந்திக்கும் பகுதி நிலவும். இதனால், வரும் 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
அதேபோல், வரும் மார்ச் 16,17 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.