காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக வாரியத்தை அமைக்கவும் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கானது வரும் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வணிகர் சங்கமும் ஆதரவு கொடுக்க, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சேலம் குகை, கே.எஸ். தியேட்டர் அருகே உள்ள தெற்கு தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தபால் நிலையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.