Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதிவாரி கணக்கெடுப்பு - பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்..!!

Advertiesment
Ramdoss

Senthil Velan

, செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (14:08 IST)
2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஆணையை பிறப்பிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராமதாஸ் எழுதிய கடிதத்தில், மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தங்களின் தலைமையிலான அரசு 100 நாட்களை நிறைவு செய்திருப்பதுடன், 100 நாள் இலக்குகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருப்பதற்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் சமூக நீதியைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப் பட வேண்டிய முதன்மையான நடவடிக்கை குறித்து தங்களின் மேலான கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை தங்களுக்கு தான் எழுதுகிறேன்.
 
இந்தியா அனைத்துத் துறைகளிலும் உலக நாடுகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறி வருகிறது என்பதில் எந்த வித ஐயத்திற்கு இடமில்லை. அதே நேரத்தில் சமூக நீதியைக் காப்பதில் பல்லாண்டுகளாக போடப்பட்டு வரும் முட்டுக்கட்டைகளை அகற்றுவது மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது. உலகில் சமூகப்படி நிலையில் மிகப்பெரிய அளவிலான ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதன்மையானது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது தான் தங்கள் அரசின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும். இந்த இலக்கை சாத்தியமாக்குவதற்கான சிறந்த கருவி தான் சமூக நீதி ஆகும்.
 
பல நூற்றாண்டுகளாக கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு சமூகப்படி நிலையின் அடித்தளத்திற்கு தள்ளப்பட்ட சமூகங்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்த உரிமைகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதன் மூலம் தான் அவர்களை சமூகப்படி நிலையில் உயர்த்தி சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியும். இந்த நடைமுறையின் அடிப்படை இட ஒதுக்கீடு. ஆனால், தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 
 
இட ஒதுக்கீட்டின் நியாயத்தை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நிருபிக்க சாதிவாரி மக்கள் தொகை புள்ளி விவரங்கள் தேவை. ஆனால், நம்மிடம் அது இல்லை. இந்தியா விடுதலை அடைந்த பிறகு இதுவரை வழங்கப்பட்ட எந்தவொரு எந்தவொரு இட ஒதுக்கீடும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படவில்லை. இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதை பல்வேறு தருணங்களில் உச்சநீதிமன்றமும், பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களும் வலியுறுத்தியுள்ளன.
 
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை முறையாக நடத்தி, இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரியான மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதாச்சாரம் நிரூபிக்கப்படவில்லை என்றால் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இட ஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்படக் கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் அது இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும். அதைத் தவிர்ப்பதற்காகத் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பல பத்தாண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த காலங்களில் பலமுறை எழுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அரசும் அதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆக நடத்த அப்போதைய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், அது சாதி, சமூக, பொருளாதார கணக்கெடுப்பாக மாற்றப்பட்டது. அதன் விவரங்களும் கூட இன்று வரை வெளியிடப் படவில்லை.
 
2014ம் ஆண்டு தங்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகும் இந்தக் கோரிக்கை பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்களின் தலைமையிலான முதல், அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், கடந்த 31ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2018ம் ஆண்டு உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் நடத்திய கலந்தாய்வுக்குப் பிறகு, சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் விவரங்களும் திரட்டப்படும் என்று அறிவித்தார். அது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
 
2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. இடைப்பட்ட காலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமா, மேற்கொள்ளப்படாதா? என்ற ஐயங்களும் எழுப்பப்பட்டன. மக்கள் தொகை கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாகி விட்ட நிலையில், நடப்பாண்டின் இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கணக்கெடுப்பின் போது சாதிவாரியான விவரங்கள் சேகரிக்கப்படுமா? என்று கேட்டபோது, அதற்கான வாய்ப்புகளை மறுக்காத மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதுகுறித்த மத்திய அரசின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று பதிலளித்திருப்பது தங்களின் நம்பிக்கையை வலுப்பெறச் செய்திருக்கிறது. இந்தியாவில் 1931ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 90 ஆண்டுகளாக நடத்தப்படாத சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்த முறையாவது நடத்துவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை இந்தியாவின் பெரும்பான்மையான தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை; எந்தத் தடையும் இல்லை.

வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்புகாக திரட்டப்படும் புள்ளி விவரங்களுடன் சாதி என்ற ஒரே ஒரு பிரிவை சேர்த்தால் போதுமானது; சாதிவாரி விவரங்கள் கிடைத்துவிடும். இதற்கு எந்த கூடுதல் செலவும் ஏற்படாது. மாறாக, சாதிவாரி மக்கள் தொகை விவரங்கள் திரட்டப் படுவதால் நாட்டுக்கும், மக்களுக்கும் சமூக நீதி சார்ந்து கிடைக்கும் பயன்கள் எல்லை இல்லாதவை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக இந்தியப் பிரதமர் பதவியை அலங்கரிக்கும் தாங்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தேவையையும், முக்கியத்துவத்தையும் முழுமையாக அறிந்திருப்பீர்கள்.


எனவே, இந்தியாவில் சமூக நீதியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஆணையை பிறப்பிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றம்.! துரைமுருகனுக்கு ஏமாற்றம் - தமிழிசை..!!