இலங்கையின் 9-வது அதிபராக அநுரா குமார திசாநாயக்க பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசாநாயக்க இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பின் போது உரையாற்றிய அவர், எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவேன் என்றும் சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையே புதிய தொடக்கத்துக்கான அடித்தளம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்று அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபராக பதவி ஏற்ற அநுரா குமார திசாநாயக்கவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
மோடி வாழ்த்து:
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கை அதிபர் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் கடல்சார் தொலைநோக்கு ஆகியவற்றில் இலங்கை உயர் முன்னுரிமை இடத்தைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்
நமது மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மேம்பாட்டிற்காக நமது பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்த உங்களுடன் விரிவாக பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் வாழ்த்து:
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அநுரா குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
பரஸ்பர வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக நமது நாடுகள் தொடர்ந்து இணைந்து செயல்படட்டும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.