மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த அவரது போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு ஒன்று நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அவரது வீட்டை அரசுடமையாக்கும் பணியில் தமிழக அரசு தற்போது இறங்கியுள்ளது. கடந்த வாரம் இதற்கான மதிப்பீடு செய்யும் பணியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் அவரது இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர். அவர் ஒரு குற்றவாளி, அவரது இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்துள்ள வழக்கில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்பது எதிர்பார்க்கப்படுகிறது.