Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருசக்கர ஊர்தி, மகிழுந்துகளுக்கான சாலைவரியை ரூ.1000 கோடி உயர்த்த முடிவா? அன்புமணி ராமதாஸ் டுவீட்

Advertiesment
Anbumani
, திங்கள், 19 ஜூன் 2023 (12:59 IST)
இருசக்கர ஊர்தி,  மகிழுந்துகளுக்கான  சாலைவரியை ரூ.1000 கோடி உயர்த்த முடிவா? மாநில அரசு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

‘’தமிழ்நாட்டில் இரு சக்கர ஊர்திகளுக்கான சாலைவரியை இப்போதுள்ள 8 விழுக்காட்டிலிருந்து  ரூ.1 லட்சம் வரை விலையுள்ள ஊர்திகளுக்கு 10 விழுக்காடாகவும், அதற்கு கூடுதலான விலை கொண்ட ஊர்திகளுக்கு 12 விழுக்காடாகவும் உயர்த்த தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. அதேபோல், மகிழுந்துகளுக்கான சாலைவரி  இப்போதுள்ள 10% (ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலை), 15% (ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான விலை) என்ற அளவிலிருந்து  12% ( ரூ.5 லட்சத்துக்கும் குறைவான விலை), 13% ( ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலை), 15%  ( ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலை), 20% 15% (ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான விலை) என்ற அளவுக்கு உயர்த்தப்படவுள்ளது. இது நியாயமானதல்ல.

சாலைவரி உயர்வால் இரு சக்கர ஊர்திகளின் விலை ரூ.16 ஆயிரம் வரையிலும், மகிழுந்துகளின் விலை லட்சக்கணக்கிலும் உயரும். சராசரியாக 5% அளவுக்கு விலை உயர்வு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சாலை வரிகள் மூலமான தமிழக அரசின் ஆண்டு வருவாய் இப்போதுள்ள ரூ.6674 கோடியிலிருந்து ரூ.1000 கோடி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வரி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். இரு சக்கர ஊர்திகள் தவிர மீதமுள்ள அனைத்து ஊர்திகளுக்கும் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மிக அதிக தொகை வசூலிக்கப்படும் நிலையில், சாலை வரி ரத்து செய்யப்பட வேண்டுமே தவிர, உயர்த்தப்படக்கூடாது.

மகிழுந்துகளை பணக்காரர்கள் தான் பயன்படுத்துகின்றனர் என்ற வாதத்தை முன்வைத்து இந்தக் கட்டண உயர்வை தமிழக அரசு நியாயப்படுத்தக் கூடாது. வசதியான பொதுப்போக்குவரத்து உறுதி செய்யப்படாத சூழலில் சாதாரண மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் மகிழுந்துகளை பயன்படுத்தத் தொடங்கி விட்ட நிலையில், இந்த வாதம் எடுபடாது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் ஒரு  குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் பயன்படுத்தப்பட்டால்,  இரண்டாவது மகிழுந்துக்கு அதன் மொத்த விலையில் 50%, மூன்றாவது மகிழுந்துக்கு 60% என்ற அளவில் கூட சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி என்ற பெயரில் வசூலிப்பதில் தவறு இல்லை. ஆனால், இன்றியமையாத் தேவைக்காகவும்,  பிழைப்புக்காகவும் வாங்கப்படும் மகிழுந்துகளுக்கு சாலைவரியை உயர்த்துவது அநீதி ஆகும்.

சாலைவரிகளை எந்தக் காலத்திலும் உயர்த்த வேண்டிய தேவை இல்லை.  சாலை வரி விழுக்காடு அளவில் தான் வசூலிக்கப்படுகிறது என்பதால், மகிழுந்துகளின் விலை உயரும் போதும், எண்ணிக்கை அதிகரிக்கும் போதும்  அரசின் வருமானம் தானாகவே உயரும்.  எடுத்துக்காட்டாக, 2011-12ஆம் ஆண்டில்  ரூ.3210.39 கோடியாக இருந்த ஊர்தி வரி வருவாய், 2022-23ஆம் ஆண்டில் ரூ.6674 கோடியாக, அதாவது 108 விழுக்காடு  அதிகரித்திருக்கிறது. ஊர்தி வரி வருவாய் இயல்பாகவே ஆண்டுக்கு 10% அதிகரித்து வரும் நிலையில், அதை உயர்த்த வேண்டிய தேவை இல்லை. எனவே, ஊர்திகளுக்கான சாலைவரியை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.’’என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசத்தலான தரத்தில்.. அட்டகாசமான விலையில்..! – வருகிறது Nothing Phone 2!