சென்னையில் சட்டவிரோதமாக பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருவதாகவும் இதுசம்மந்தமாக 18 பைக்குகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய மோட்டார் வாகனச்சட்டப்படி பைக்குகளை வாடகைக்கு இயக்கக்கூடாது. ஆனால் அதையும் மீறி சென்னையில் சட்டவிரோதமாக பைக் டாக்ஸி இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து கே.கே.நகர் ஆர்டிஓ அதிகாரிகள் பைக் டாக்ஸிகளை வாடிக்கையாளர்கள் போன்று புக் செய்தனர். புக் செய்தவுடன் வாடிக்கையாளர்களை பிக் அப் செய்ய வந்த பைக் டாக்ஸிகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதில் ஓலா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களும் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு பயன்படுத்த பொதுப்பதிவு செய்யப்பட்ட மஞ்சள் கலர் நம்பர் பிளேட்டுடன் கூடிய வாகனமாக இருக்கவேண்டும். பின்னால் அமரும் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு, தனி சாலை வரி, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வாகன காப்புச் சான்றிதழ் பெறுவது, வாகனக் காப்பீடு தனி என பல நடைமுறைகள் உள்ளதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இவை எதுவுமே பின்பற்றப்படாமலும் முறையான அனுமதி இல்லாமலும் இந்த பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்டுள்ளன.
இந்த பைக் டாக்ஸிகளால் கால் டாக்ஸிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி ஓலா அலுவலகத்திற்கு முன் கால் டாக்ஸி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கால் டாக்ஸிகளை விட 40 முதல் 60 சதவீதம் வரைக் கட்டணம் குறைவு என்பதால் வாடிக்கையாளர்கள் இந்த பைக் டாக்ஸிகளை வருங்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.