இலக்கியத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் பாஸ்டினா சூசைராஜ் என்ற பாமாவுக்கு, 2024ம் ஆண்டுக்கான ஒளவையார் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இலக்கியத் துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் திருமிகு பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா அவர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருது அறிவிப்பு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும் திருமிகு பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா அவர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்காக கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிrவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் "ஔவையார் விருது" வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது பெறுவோருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அவ்வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து. சமூக தொண்டாற்றி வரும், முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமிகு. பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.