Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே தெருவில் இயங்கும் 6 டாஸ்மாக் கடைகள்- தினகரன் குற்றச்சாட்டு!

ttv dinakaran

Sinoj

, சனி, 2 மார்ச் 2024 (15:21 IST)
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் அதிகரிக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் - பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி, தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளதாவது:
 
''வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த 28 வது வார்டில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் ஆறு மதுபானக் கடைகள் இயங்கி வருவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் தொடங்கி வார்டு முழுவதுமே மது குடிப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
வீதிக்கு வீதி திறக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதோடு, தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அரசு தடுக்க தவறியதன் விளைவாக நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரை மற்றும் சென்னையில் ரூ.180 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
ஆகவே, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகளைக் கணக்கெடுத்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை இனியாவது தீவிர சோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்''என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்சென்னையின் பாஜக வேட்பாளர் குஷ்புவா? எதிர்த்து போட்டியிடுபவர் யார்?